டிடிவி தினகரனை விடவும் என்னால் பேச முடியும் ஆனால் அரசியல் நாகரிகம் கருதி பேசவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவிலிருந்து சமீபத்தில் விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணியில் இணையப்போவதில்லை என்று குறிவந்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.
திமுகவில் இணைவாரா ஓபிஎஸ்
அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பைத் தொடங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். ஆனால் இன்னும் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் அதிமுகவிலும் சேர முடியாமல், திமுகவிலும் சேராமல் தனித்து விடப்பட்டுள்ளார்.
முதலமைச்சருக்குப் புகழாரம்
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 20 அன்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவான ஐயப்பன், முதலமைச்சரின் உரையைப் புகழ்ந்து பேசினார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டிடிவி தினகரன் விமர்சனம்
இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
“ஓ. பன்னீர்செல்வம் அரசியலில் தொடர வேண்டும் என்பதற்காக எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அது அவரது தனிப்பட்ட விருப்பம். அது அவரது உரிமை. ஆனால் சட்டமன்றத்தில் அவரது ஆசியுடன் ஐயப்பன் பேசியது, எம்ஜிஆரையும் ஜெயாலலிதாவையும் தெய்வமாகப் போற்றும் தொண்டர்களைக் காயப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஓ. பன்னீர்செல்வம் பசுதோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது” என்று பேசினார்.
ஓ. பன்னீர்செல்வம் பதில்
இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:-
“நான் டிடிவி தினகரன் மீது உச்சபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். அவர் பேசுவதற்கு மேலாக என்னாலும் பேச முடியும். அரசியல் நாகரிகம் கருதி நான் பேசமாட்டேன்” என்றார். தொடர்ந்து அதிமுகவுக்குள் இணைய எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஔவையார் என்ன சொல்லியிருக்கிறார்? மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொல்லியிருக்கிறார். அதுதான் பதில்” என்று பதிலளித்துவிட்டுப் புறப்பட்டார்.
O. Panneerselvam said that he can critisize better than TTV Dhinakaran, but he does not speak out of political civility.