தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம்

ராம் அப்பண்ணசாமி

ஜூலை 1 முதல் தமிழ்நாட்டில் முதல் மின் கட்டணம் அமலுக்கு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் மின் கட்டணத்தை 4.83 % உயர்த்தி அறிவித்துள்ளது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். புதிய மின் கட்டணத்தின் படி யூனிட் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 4.83 வசூலிக்கப்பட உள்ளது.

இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்புக்கு தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

`பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர். சொன்னதையும் செய்வேன் சொல்லாத்தையும் செய்வேன் என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய முதல்வர் சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்து கொண்டே இருக்கிறார். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

`மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடலா? சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். சிறு குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

`விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது திமுக அரசு. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.