கோப்புப்படம் 
தமிழ்நாடு

தெய்வச்செயலுக்கு எதிராகப் புகாரளித்த மாணவிக்கு மிரட்டல்?: இபிஎஸ் குற்றச்சாட்டு

"இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்."

கிழக்கு நியூஸ்

திமுக இளைஞரணிப் பொறுப்பிலிருந்த தெய்வச்செயல் மீது புகாரளித்த மாணவிக்கு காவல் துறையினரிடமிருந்து மிரட்டல் வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தெய்வச்செயல். இவர் கல்லூரி மாணவியை ஏமாற்றியதாகப் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, திமுக இளைஞரணிப் பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். தெய்வச்செயலுக்கு எதிராகப் புகாரளித்த மாணவியைக் காவல் துறையினர் மிரட்டுவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல் துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல் துறை மிரட்டுகிறது- திமுக இளைஞரணியின் ஏவல் துறையாக காவல் துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது-

திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது! போதை இளைஞரிடம் கத்தி. பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது .

இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு மு.க. ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது?

இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்குத் தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?

ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த சார்? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!

திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.

நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து!" என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.