கோப்புப்படம் 
தமிழ்நாடு

மத்திய அரசுப் பணிகளுக்கு கட்டணமில்லாப் பயிற்சி: சனி முதல் விண்ணப்பம்!

கிழக்கு நியூஸ்

மத்திய அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கான தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா உறைவிடப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பம் தொடங்குகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டிப் பிரிவானது கடந்தாண்டு மார்ச் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் இந்தப் பிரிவு சார்பில் பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வுகள் மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாதகாலப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்கானப் பயனாளர்கள் 1,000 பேரைத் தேர்வு செய்ய இருவேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 23. ஜூலை 9-ல் நுழைவுச் சீட்டு வெளியாகும். ஜூன் 14-ல் காலை 10 மணி முதல் 11 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.