தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு தங்களுடைய தார்மிக ஆதரவு இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை வேப்பேரியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செப்டம்பர் 4 அன்று மதுரையில் மாநாடு நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். 2026-ல் தேர்தலில் தெளிவான முடிவை எடுக்கும் வகையில் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:
"அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்கும் குழுவாக மதுரை மாநகரில் செப்டம்பர் 4 அன்று ஒரு மிகப் பெரிய தமிழகம் தழுவிய ஒரு மாநாடாக அந்த மாநாடு அமையும். அந்த மாநாடு வெற்றி மாநாடாகவும் அமையும். அந்த மாநாட்டில் பல முக்கியக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா கடந்து வந்த அரசியல் பாதையில் தான் பயணிப்போம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கேள்வி: மாநாட்டில் தனிக்கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வருமா? தனிக்கட்சி தொடங்குவது குறித்த திட்டம் உள்ளதா?
ஓ. பன்னீர்செல்வம்: எங்களைப் பொறுத்தவரை அதிமுக தான் எங்களுடைய உயிர்நாடி இயக்கம். இந்த இயக்கத்தில் சில சட்ட முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. அதனை தொண்டர்கள் உரிமையாக எம்ஜிஆர் தந்த உரிமையைக் காக்கும் போராட்டமாகத்தான் எங்களுடைய போராட்டம் போய்க்கொண்டிருக்கிறது. இதில் உறுதியாகத் தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள்.
கேள்வி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உங்களுடைய அணி இடம்பெற்றுள்ளதா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக என்ன சொல்கிறது.
ஓ. பன்னீர்செல்வம்: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம்.
கேள்வி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறீர்களா?
ஓ. பன்னீர்செல்வம்: எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.
கேள்வி: மதுரை மாநாட்டுக்கு சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு உள்ளதா?
ஓ. பன்னீர்செல்வம்: உறுதியாக அழைப்பு இருக்கும். எங்களுடைய அங்கம் தான் அவர்கள் இருவரும். உறுதியாக நேரடியாகச் சந்தித்து அழைப்பு விடுப்போம்.
கேள்வி: விஜயின் அரசியல் நகர்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
ஓ. பன்னீர்செல்வம்: விஜயின் அரசியல் நகர்வுகள் இன்று வரை நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. அவர் எதிர்காலத்தில் என்ன நிலையை ஜனநாயக முறைப்படி எடுக்கிறார் என்பதைப் பார்த்து அவருக்கு எங்களுடைய தார்மீக ஆதரவு உண்டு.
கேள்வி: விஜய் உங்களிடம் ஆதரவைக் கேட்டால், நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?
ஓ. பன்னீர்செல்வம்: எதிர்காலத்தில் நல்லது நடக்கும்.
கேள்வி: எடப்பாடி பழனிசாமி இந்தப் பிரசாரத்தின் மூலமாக முழு சங்கியாக மாறிவிட்டார் என துணை முதல்வர் சொல்கிறார்.
ஓ. பன்னீர்செல்வம்: அவரிடம் தான் கேட்க வேண்டும். எந்த வகையில் மாறிவிட்டார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்களுக்கிடையே மறுபடியும் சண்டையை மூட்டிவிடுகிறீர்கள்.
OPS | O Panneerselvam | Vijay | TVK Vijay |ADMK | EPS | Edappadi Palaniswami