https://x.com/OfficeOfOPS
தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாளில் அதிமுக ஒன்றிணைய சபதம் ஏற்போம்: ஓ. பன்னீர்செல்வம் கருத்து |O. Panneerselvam | ADMK |

அதிமுகவின் சட்ட விதிகளுக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்றும் ஆதங்கம்...

கிழக்கு நியூஸ்

நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் பிரிந்து சென்ற அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அண்ணாவின் பிறந்தநாளில் இதற்காக சபதம் ஏற்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அண்ணா சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

“புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் தங்களுடைய பொற்கால ஆட்சியில், மாநிலத்தின் சொந்த வருவாயைக் கொண்டு அனைத்து மக்களுக்கும் நேரடியாகப் பயன்படும்படி பல நல்ல திட்டங்களைக் கொடுத்து, வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தினார்கள். அந்த சாதனை மீண்டும் திரும்ப வேண்டும் என்றால், தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என்றால், பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது. இதைத்தான் இன்றைக்கு மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, தொண்டர்களுடைய உணர்வுகளையும், தமிழக மக்களுடைய உணர்வுகளையும் மதித்து, பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம். அந்த சபதம் வெற்றி பெறும். அதிமுக எந்த வழியில் சென்றால் நல்ல வழியாக இருக்கும் என்று கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விதிகளையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த சட்டவிதியை இரு பெரும் தலைவர்கள் 50 ஆண்டு காலம் நடைமுறப்படுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு அதிமுகவின் சட்ட விதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் நிலையில் சட்ட விதிகள் இல்லை. சாதாரண தொண்டன் கூட அதிமுகவின் பொதுச்செயலாளராக வரலாம் என்ற சட்ட விதி இருந்தது. அதைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.

அதற்கு இன்றைக்கும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் சூட்டில் ஆறு வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கு முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த அடிப்படையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும். தலைவர்கள் இணையவில்லை என்று சொன்னால், தொண்டர்கள் இணைந்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவார்கள். செங்கோட்டையன் அவர்களுடன் நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் நாங்கள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நேரம் ஒத்துழைத்தால் நயினார் நாகேந்திரனைச் சந்திப்பேன். அரசியலில் எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை. எதுவும் நடக்கலாம். அரசியலில் இனிமேல் வரவேண்டியவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள், அனைவரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தாரக மந்திரங்களைத்தான் சொல்லியாக வேண்டும். அப்போதுதான் அரசியலில் வெற்றி பெற முடியும்.”

இவ்வாறு தெரிவித்தார்.

O Panneerselvam | ADMK | Sengottaiyan | EPS |