கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

துரோகத்தைத் தட்டிக் கேட்டதற்கு தண்ணீர் பாட்டிலை எறிந்தார்கள்: ஓ. பன்னீர்செல்வம்

"முதல் விருப்பமாக வாளி சின்னம் வேண்டும் என்று கேட்டுள்ளேன்."

கிழக்கு நியூஸ்

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தைக் கேட்டதற்குப் பரிசாக பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு எறிந்தார்கள் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் இன்று தாக்கல் செய்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"முதல் விருப்பமாக வாளி சின்னம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். அடுத்தது பலாப்பழமும், திராட்சை பழமும் கேட்டுள்ளேன்.

அதிமுகவில் முன்பெல்லாம் சாதாரண தொண்டர்கள்கூட வேட்பாளர்களாகப் போட்டியிடலாம். ஆனால், இன்றைய நிலையில் கழகத்தின் உச்சபட்ச பதவிக்குப் போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விதிகளை மாற்றியுள்ளார்.

தலைமைக் கழக நிர்வாகியாக 5 வருடம் இருக்க வேண்டும் என திருத்தம் கொண்டு வந்துள்ளார். இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் மாபெரும் துரோகம். இதைக் கேட்டதற்குப் பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டிலை பரிசாக எறிந்தார்கள்" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.