கோப்புப் படம்
கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

திருச்சி: இடிபாடுகள் உள்ள கட்டடங்களைப் பழுது பார்க்குமாறு நோட்டீஸ்

ஜெ. ராம்கி

திருச்சி மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் ஆரம்பித்திருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் களப்பணியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.

புத்தாண்டுத் தினத்தன்று திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டடப்பட்ட சுண்ணாம்பு கட்டடம் என்பதால் கட்டடத்தின் பல பகுதிகள் பலவீனமாக இருந்திருக்கின்றன. இரவு நேரத்தில் வீட்டின் முன்னறையில் அனைவரும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பலியாகிவிட்டார்கள்.

திருச்சி மாநகரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கட்டடங்கள் பற்றிய கணக்கெடுப்பை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவிருப்பதாக மேயர் அன்பழகன் அறிவித்திருந்தார். மாநகராட்சி நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவில் உறையூர், தென்னூர், புத்தூர், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 300-க்கும் அதிகமான கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இடிந்து கீழே விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக பழுது பார்த்துச் சரி செய்யுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பழுது பார்க்க முடியாத நிலையில் உள்ள கட்டடங்களை இடித்துவிட்டுப் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியின் முன்னெடுப்பைத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும், நகராட்சிகளும் பின்பற்றவேண்டும் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள். திருநெல்வேலி, கும்பகோணம் போன்ற பகுதிகளில் 50 ஆண்டுகள் பழமையான பல கட்டடங்கள் கவனிப்பாரின்றிப் பராமரிக்கப்படாத நிலையில் இருந்து வருகின்றன. பழைய கட்டடங்களைப் பாரம்பரியமுறையில் பாதுகாக்கும் பணியை மேற்காள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள். இவ்விஷயத்தில் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படவேண்டிய பணிகள் ஏராளமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்