ANI
தமிழ்நாடு

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

ராம் அப்பண்ணசாமி

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளார் விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன்.

மாஞ்சோலை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு சிறப்பு குழு அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உயர் நீதிமன்றம் தற்காலிக தீர்வை அளித்துள்ளது, அவர்களுக்கு நிரந்தர மறுவாழ்வை ஏற்படுத்தக்கோரி தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளார் சிந்தனை செல்வன். இத்துடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப் பெருந்தகை மற்றும் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் ஆகியோரும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 99 வருடங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை ஒப்பந்தம் 2028 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. ஆனால் குத்தகை எடுத்தத் தனியார் நிறுவனம் தொழிலாளர்களை தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதைத் தொடர்ந்து, தங்களுக்கு மறு வாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டி அந்தப் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடுத்தார். `இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.