கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது தவறா?: சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ் விளக்கம்

கிழக்கு நியூஸ்

பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை என சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வது, சசிகலா காலில் விழுந்தது தொடர்புடைய படங்களைக் காட்டி உதயநிதி பிரசாரம் மேற்கொள்வது, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"2 கோடி தொண்டர்களில் நானும் ஒரு தொண்டன். ஓ. பன்னீர்செல்வம் விவகாரத்தில் 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவின்படிதான் நான் செயல்படுகிறேன்

நான் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது தவறா? மூன்றாவது நபரிடம் ஆசிர்வாதத்தை வாங்கவில்லையே. பிரதமரை எதிர்ப்பதாக வீர வசனம் பேசுகிறார்கள். கருப்பு குடையைப் பிடித்தால் கோபித்துக்கொள்வார் என்று வெள்ளை குடையைப் பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமரை அழைக்கிறார்கள். அங்கு சரணகதி, இங்கு வீர வசனம். இதுதான் இரட்டை வேட திமுக.

பாஜகவின் மூத்த தலைவர்கள் என யார் தேர்தலில் போட்டியிட்டாலும், வாக்களிப்பது மக்கள்தான். மக்கள் யாரைத் தீர்மானிக்கிறார்களோ, அந்த வேட்பாளர்தான் வெற்றி பெறுவார். களத்தில் நிற்பவர்களைப் பற்றி கவலையில்லை.

பணக்காரர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் அந்தக் காலம். நான் சாதாரண கிளைச் செயலாளர், இன்று பொதுச்செயலாளர் ஆகவில்லையா. மக்களுடைய மனம் மாறிவிட்டது" என்றார் எடப்பாடி பழனிசாமி.