கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

அண்ணாமலைக்கு எதிராக வழக்குத் தொடர உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்

கிழக்கு நியூஸ்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கலந்துகொண்டதற்கு எதிராக பாஜக சார்பில் கடந்தாண்டு செப்டம்பர் 11-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 1956-ல் மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்க விழாவில் முன்னாள் முதல்வர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக விமர்சித்ததாகவும், இதற்கு அண்ணா மன்னிப்புக் கோரியதாகவும் அண்ணாமலை பேசியிருந்தார்.

இவருடைய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, தான் பேசியது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அப்போது செய்தி வெளியானதாகவும் அவர் மேற்கோள் காட்டினார். ஆனால், அண்ணா வருத்தம் தெரிவித்ததற்கு, மன்னிப்புக் கேட்டதற்கும் குறிப்பு எதுவும் இல்லை என ஆங்கில நாளிதழ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதற்கு பொய் செய்தி பரப்புதல் உள்ளிட்ட புகார்களின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு ஆலுநர் அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்குக் கடந்த இரண்டு நாள்களாக பொதுமக்களிடமிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்தவொரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.