தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து மழை காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அக்டோபர் 24 நிலவரப்படி இயல்பை விட அதிகளவு மழை பெய்துள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் முன்வைத்த தரவுகள் கூறுகின்றன. இதனிடையே, வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அக்டோபர் 27 அன்று மோந்தா புயலாக வலுப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மோந்தா புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அவர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16 முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துகொண்டிருக்கிறது. வருவாய்த் துறை கணக்கின்படி அக்டோபர் 1 முதல் அக்டோபர் 24 வரை மொத்தம் மழை பெய்ததன் கணக்கு 21.8 சென்டிமீட்டர்.
இது இயல்பாகப் பெய்யக்கூடிய மழையை விட அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழையில் இந்த முறை அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நமக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள், எச்சரித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வேண்டிய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.
தற்போது வங்கக் கடலில் உருவாகியிருக்கிற மோந்தா புயல், முதலில் சென்னையை நோக்கி வருவதாக நமக்கு தகவல் இருந்தது. இப்போது அது ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், அதன் ஒரு பகுதியாக சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இத்தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அந்த மூன்று மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். இதேபோல், அக்டோபர் 24, 2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஏரிகளின் தற்போதைய நிலையைப் பார்த்தால், பூண்டி ஏரியில் 83.53% நீர் இருப்பு, சோழவரத்தில் 60.5% நீர் இருப்பு, செங்குன்றத்தில் 81.85% நீர் இருப்பு, செம்பரம்பாக்கத்தில் 80.36% நீர் இருப்பு மற்றும் தேர்வாய்கண்டிகை ஏரியில் 87.80% நீர் இருப்பு உள்ளது.
நீர்வளத் துறை, வருவாய் துறையுடன் இணைந்து நீர்மட்டத்தை கண்காணிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். மழையின் அளவைப் பொறுத்து நீரைத் தேக்க முடிந்தால், தேக்கலாம். தேக்கி வைக்க முடியாத அளவுக்கு நீர்வரத்து இருந்தால், தண்ணீரை வெளியேற்றுகிற பணியை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறோம்.
அதேபோல, தண்ணீர் திறந்துவிடும் நேரத்தில், கரையோரப் பகுதி மக்களுக்கு உரிய அறிவிப்பு செய்து, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில், ஆங்காங்கே பொதுமக்களை தங்கவைப்பதற்கான நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இது மட்டுமல்லாமல் அரிசி, பருப்பு, பால் போன்ற பொருள்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், ஆள்கள் வந்த பிறகு கொண்டுவருவதற்கு பதிலாக, வரும் நேரத்திலேயே அவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் அவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் புயலால் பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், இந்த மூன்று மாவட்டங்களுக்கும் கட்டாயம் மழை இருக்கும். இதை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அவரே நேரடியாக ஆய்வு செய்கிறார்.
ஒவ்வொரு பணியையும் முதல்வர் நேரில் பார்த்து செய்தால் தான் அவருக்கு திருப்தி. அவரது குணம் என்னவென்றால், எந்த காரியமாக இருந்தாலும் அவர் பார்க்க வேண்டும், அப்போதுதான் அவருக்கு திருப்தி வரும். அந்த அளவுக்கு திருப்தியாகப் பணிகளைச் செய்து வருகிறார்கள். அதேபோல, நெல் கொள்முதல் பணிகளையும் முதல்வர் விரைவுபடுத்தி வருகிறார்.
இந்தப் பணியில், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதிலும், விவசாயத் துறை அதிகாரிகளும் வருவாய்த் துறை அதிகாரிகளும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். கணக்கெடுப்பு முடிந்தவுடன் உடனடியாக அந்தப் பணத்தை வழங்க வேண்டிய வேலைகளைச் செய்யவிருக்கிறோம்.
இந்த மழை மூன்று மாதங்களுக்கு இருக்கும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்குப் பருவமழை இருக்கும். இதை எதிர்கொள்ள அனைத்து இடங்களிலும் தயாராக உள்ளது.
அக்டோபர் 1 முதல் அக்டோபர் 25 வரை மனித உயிரிழப்புகள் 31. காயமடைந்தவர்கள் 47 பேர். கால்நடைகள் இறப்பு 485. கோழிகள் - 20,425. குடிசை வீடுகள், வீடுகள் - 1,780. இவற்றுக்கெல்லாம் உடனடியாக நிவாரணம் பாதிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. மீதியையும் மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
Since the onset of the northeast monsoon in Tamil Nadu, 31 people have lost their lives due to rain-related incidents, said Minister K.K.S.S.R. Ramachandran
Rain Alert | North East Monsoon | Cyclone Montha | Cyclone |