ANI
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: தமிழக வெற்றிக் கழகம்!

2026-ல் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவதுதான் இலக்கு

ராம் அப்பண்ணசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

`கட்சித் தலைவர் விஜய் அவர்கள் விரைவில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் வெளியிட்டு அதற்குப் பிறகு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நடத்துவார். வரும் 2026-ல் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவதுதான் இலக்கு என்றுத் தெரிவித்துள்ளார்’ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆனந்த்.

மேலும், `ஜூலை 10-ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் த.வெ.க ஆதரவு அளிக்கவில்லை’ என்று த.வெ.க.வின் நிலைபாடு குறித்து அறிக்கையில் விளக்கியுள்ளார் ஆனந்த்.

இதனால் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பது தெளிவாகியுள்ளது. மாநில அளவில் கட்சி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் புஸ்ஸி ஆனந்த்.

கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அந்த சமயம் 18வது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் சூழல் இருந்ததால், மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, 2026-ல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்கள் இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது்.