எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக உள்ளவரை இணைவது குறித்த பேச்சுக்கே இடமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரிந்து செயல்பட்டு வரும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைவோம் என்று பேசியிருந்தார். இதுதொடர்பாக மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
"அமமுகவின் நிலைப்பாட்டைத் தெளிவாக கூறியுள்ளேன். 2017-ல் அமமுக தொடங்கியபோது, என்ன சூழல் நிலவி வந்ததோ, அதே சூழல்தான் தற்போதும் நிலவி வருகிறது. 2017-ஐ காட்டிலும் எடப்பாடி பழனிசாமி இன்று இன்னும் அராஜகம் பிடித்த பழனிசாமியாக மாறியிருக்கிறார். ஓ. பன்னீர்செல்வத்தையும் வெளியேற்றி, தன்னிச்சையாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவெடுத்து வருகிறார். பழனிசாமி எனும் தீய மனிதர் பொதுச்செயலாளராக உள்ள வரை அவர்களுடன் சேர்வது சாத்தியமாகாது.
2017-ல் நீடித்த நிலையே தற்போதும் நீடிப்பதால், நாங்கள் மீண்டும் ஒன்றிணைவது என்ற வார்த்தைக்கு இடமில்லை. அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை சின்னம், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி, ஜெயலலிதா வழிநடத்திய கட்சி என்றெல்லாம் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, சுயபரிசோதனை செய்ய வேண்டும். பழனிசாமி தலைமையில் அதிமுக எப்படி சரிவைச் சந்தித்து வருகிறது, இரட்டை இலை சின்னம் எப்படி பலவீனம் அடைந்து வருகிறது என்பதைத் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். தொண்டர்கள் சிந்திக்காமல் இல்லை, வேண்டுமென்றே தெரியாததைப்போல கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் விழிப்புணர்வு பெறாத வரை, அவர்கள் நல்ல முடிவை எடுக்காத வரை, அவர்களுடன் சேர்வது குறித்து கேள்வியெழுப்புவதே தவறு.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்பது திமுக கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையிலான தேர்தலாக மாறியுள்ளது. பாமகவும் இங்கு வலிமையாகப் போட்டியிடுவார்கள் என்பது தெரியும். எனவே, அதிமுகவினர் பயந்து தேர்தலில் போட்டியிடாமல் ஓடியிருக்கிறார்கள்" என்றார் டிடிவி தினகரன்.