கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ரயில் ஹாரன் அடிக்கவில்லை, கேட் மூடப்படவில்லை என வேன் ஓட்டுநர் பேட்டியளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இன்று காலை பள்ளி வேன் ஒன்று ரயில் கேட்டை தாண்டி ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் (வண்டி எண் 56813) பள்ளி வேன் மீது மோதியது.
இதில் பள்ளி வேன் சில மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. விபத்தின்போது வேனில் நான்கு மாணவர்களும் ஓட்டுநரும் இருந்துள்ளார்கள். இதில் சாருமதி (15), நிமலேஷ் (10) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவர் விஸ்வேஷ் மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் அவர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். கேட் கீப்பர் தூங்கிவிட்டதாக செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. ரயில்வே தரப்பில் வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச் சொல்லி கேட்டதாகவும் பகுதி மக்கள் கேட்டை திறக்கச் சொல்லி கேட்டதாகவும் கூறப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வேஷ் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "காலை 7.30 மணி இருக்கும். எப்போதும் செல்லக்கூடிய நேரம் தான். அங்கே எப்போதும் கேட் இருக்கும் நின்றுவிடுவோம். இன்று கேட் போடவில்லை, சிக்னலும் இல்லை, ரயில் வரும் சப்தமும் இல்லை. எனவே, ரயில் சென்றிருக்கும் அல்லது தாமதமாக வருகிறது என்று ஓட்டுநர் சாதாரணமாக ஓட்டிச் சென்றிருப்பார். ஆனால், திடீரென்று ரயில் இடித்துவிட்டது. ரயில் இடித்தவுடன் கீழே கிடந்ததைப்போல இருந்தது. மயக்கம் இல்லை, நான் எழுந்துவிட்டேன். கேட் கீப்பர் உள்ளேயே இருந்தார். வேனில் 4 பேர் மற்றும் ரயில் ஓட்டுநர் இருந்தோம். ரயில் சப்தமும் கேட்கவில்லை, கேட்டும் போடவில்லை" என்றார்.
ஓட்டுநர் சங்கர் கூறுகையில், "கேட் போடவில்லை. ரயில் ஹாரன் அடிக்கவில்லை. ரயில் சப்தமும் கேட்கவில்லை" என்றார்.