https://x.com/BSPTamilnadu
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்களுக்கு வாய்ப்பு குறைவு: காவல் ஆணையர்

அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆம்ஸ்ட்ராங் வேப்பேரியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கொலையில் அரசியல் பின்னணி இருப்பதற்கான காரணம் குறைவு. இவருக்கு வேறு சில குழுக்களுடன் தகராறு இருந்திருக்கிறது. இந்தக் கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

புன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையிலிருந்தபோது சில சம்பவங்கள் நடந்துள்ளன. அதை விசாரித்து வருகிறோம். முழு விசாரணைக்குப் பிறகே இந்தத் தகவல் குறித்து முழுமையாகத் தெரியவரும்.

முன்பு இவர் மீது சில வழக்குகள் இருந்துள்ளன. நீதிமன்றம் மூலம் அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டன. இதற்கு முன்பு இருந்த பிரச்னைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகத் தகவல் எதுவும் வரவில்லை" என்றார் காவல் ஆணையர்.