தமிழ்நாடு

கொரோனா தொற்று குறித்த அச்சம் வேண்டாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர்

"கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் அல்லது மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் எதுவும் வரவில்லை."

கிழக்கு நியூஸ்

கொரோனா தொற்று குறித்து அவசியமற்ற அச்சம் தேவையில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்த அச்சம் தேவையில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மே 12-க்கு பிறகு தமிழ்நாட்டில் புதிதாக 32 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்து கேரளத்தில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று குறித்த அச்சம் நிலவியது.

இதுகுறித்த அச்சம் எதுவும் தேவையில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

"தற்போதைய நிலையில் கொரோனா பெருந்தொற்றைக் கடந்து பொது சுகாதார அவசர நிலையைக் கடந்து மற்ற ஆயிரக்கணக்கான ஒரு வைரஸ் போல கொரோனா தொற்றும் ஒரு வைரஸாக இருந்து வருகிறது.

பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டியது, கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மற்ற வைரஸ், பேக்டீரியாக்களை போல கொரோனா தொற்றும் அவ்வப்போது வரும், கட்டுப்படுத்தப்படும், தொடர்ச்சியாக இருந்துகொண்டுதான் இருக்கும்.

கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் அல்லது மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் எதுவும் வரவில்லை. பொதுமக்களுக்கு இதுகுறித்த எந்தப் பயமும் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுகாதார கட்டமைப்பில் மருந்து, மாத்திரைகள், பரிசோதனைகள், படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. தேவைப்படும் போது இதை உடனுக்குடன் விரிவாக்குவதற்கான வழிமுறைகளும் நம்மிடம் உள்ளன. எனவே, தேவையற்ற பயம் யாருக்கும் தேவையில்லை.

அதே நேரத்தில் பின்வரும் காலங்களில் இதுமாதிரி ஏதேனும் தொற்று ஏற்பட்டால், அது முழுமையாக முறைப்படி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். எனவே, இந்தச் சூழலில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து தேவையற்ற பயம், அச்சம் தேவையில்லை" என்றார் செல்வவிநாயகம்.