கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் பதற்றமடையத் தேவையில்லை: மா. சுப்பிரமணியன்

கிழக்கு நியூஸ்

கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளவர்கள் பதற்றத்துடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரொனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி ஸ்காட் என்ற நபர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் தன்னுடைய மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் என தடுப்பூசியைத் தயாரித்த ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்தச் செய்தி கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் லேசான பதற்றத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் நீர்மோர் பந்தலைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையால் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி அச்சம் குறித்து அவர் கூறியதாவது:

"எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும், அவரவர் உடலில் இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்துதான் அதன் பின்விளைவுகள் இருக்கும்.

ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருப்பதைப் பார்த்தேன். ரத்தம் உறைதல் மாதிரியான பாதிப்புகள் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இதுவரை அதுமாதிரியான பெரிய பாதிப்புகள் எதுவும் வெளியில் தெரியவில்லை. இருந்தாலும்கூட, கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தியிருப்பவர்கள் பதற்றத்துடன் வாழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, காலையில் நடைப்பயிற்சி போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பாதிப்பு என எந்தப் புகாரும் வரவில்லை" என்றார் மா. சுப்பிரமணியன்.