கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி இயக்குநரகம் சார்பில் எந்த முகாமும் நடத்தப்படவில்லை என தேசிய மாணவர் படை (என்சிசி) இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்துவதாகக் கூறி என்சிசி பயிற்சியாளர் பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சிவராமன் என்பவருக்கும் என்சிசி-க்கும் தொடர்பு இல்லை என்பதும் போலியாக என்சிசி முகாம் நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவொரு முகாமும் நடத்தப்படவில்லை என தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கான என்சிசி இயக்குநரகம் விளக்கம் தந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் என்சிசி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி என்சிசி நபர்களால் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் பங்கெடுத்த பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் நிகழ்வு தொடர்பாக ஆகஸ்ட் 19-ல் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவத்துக்கும் என்சிசியால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் நபருக்கும், என்சிசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தச் செய்தி முற்றிலும் தவறானது" என்று என்சிசி இயக்குநரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.