தமிழ்நாடு

வாக்கு சதவீதத் தரவுகளை வெளியிடுவதில் எந்தத் தாமதமும் இல்லை: தேர்தல் ஆணையம்

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத் தரவுகளை வெளியிடுவதில் எந்தத் தாமதமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

படிவம் 17சி தரவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்காததை தேர்தல் ஆணையம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், வாக்கு சதவீதத் தரவுகளை வெளியிடுவதில் எந்தத் தாமதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தொகுதிவாரியாக வாக்கு சதவீதத் தரவுகள் வேட்பாளர்களிடம் எப்போதும் இருக்கும் என்ற தேர்தல் ஆணையம், வோடர் டேர்ன்அவுட் செயலி மூலம் குடிமக்கள் எந்த நேரத்திலும் இந்தத் தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், வாக்கு சதவீதத் தரவுகளை யாராலும் மாற்ற முடியாது என்றும் படிவம் 17சி மூலம் அனைத்து வேட்பாளர்களினுடைய ஏஜென்டுகளிடமும் தேர்தல் நாளில் இந்தத் தரவுகள் பகிரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்த அறிக்கையுடன் முதல் 5 கட்ட வாக்குப்பதிவில் தொகுதிவாரியாகப் பதிவான வாக்கு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது.