காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.
ஒரு கவுன்சிலர்கூட நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காததால், இந்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. மேயர் பதவியை மகாலட்சுமி தக்கவைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார். இவருடையக் கணவரின் தலையீடு அதிகளவில் இருப்பது உள்பட மேயர் மகாலட்சுமிக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மகாலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, மகாலட்சுமியைப் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் 33 மாமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தார்கள். இதன் அடிப்படையில், இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்கவில்லை. மாநகராட்சி சிறிது நேரம் அவகாசம் அளித்திருந்தார். இருந்தபோதிலும், ஒருவரும் வராததால், தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.
மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையும் பட்சத்தில், அடுத்த ஓராண்டுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாது.