தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் எதிர்க்கட்சியினரை சட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காமல் பாரபட்சம் காட்டுவதாகவும் அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இதை வழிமொழிந்தார். செங்கோட்டையன் உள்பட அதிமுக உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறத் தொடங்கியதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவை இருக்கையிலிருந்து வெளியேறினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
தீர்மானத்தின் மீதான உரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கனிவானவர், அதேசமயம் கண்டிப்பானவர் என்றார். கடந்த காலங்களைப்போல அல்லாமல் என்னுடையத் (முதல்வர்) தலையீடு அல்லது அமைச்சர்கள் தலையீடு இல்லாமல் பேரவை நடைபெறுவதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், அப்பாவு எப்படி நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் அறியவே வாக்கெடுப்பு என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, தீர்மானம் தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவிஷன் முறையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்டு கதவுகள் அடைக்கப்பட்டு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த முறையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பிலும் அப்பாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 63 பேர் மட்டுமே வாக்களித்தார்கள். 154 பேர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.