தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி இல்லை... மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம்: இபிஎஸ்

"கூட்டணி குறித்து நான் வேண்டுகோள் விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்கு மட்டுமே..."

கிழக்கு நியூஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலின்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம். பாஜகவைத் தவிர்த்துதான் கூட்டணி குறித்து நாங்கள் பேசி வருகிறோம்.

பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்ப வேண்டாம். எங்களுக்கு மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசு அகற்றப்பட வேண்டும் என்பது முதல் அம்சம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பது இரண்டாவது அம்சம்.

கூட்டணி குறித்து நான் வேண்டுகோள் விடுப்பது எல்லாம் மற்ற கட்சிகளுக்கு மட்டுமே. அதை பாஜகவுடன் பொருத்திப் பார்க்க வேண்டாம். நாங்கள் ஏற்கெனவே கூறியதை எதற்காக மீண்டும் மீண்டும் கூற வேண்டும்."

ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி முன்பு கூறியது பேசுபொருளானது. இந்த நிலையில், பாஜக தவிர்த்து ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.