தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கிழக்கு நியூஸ்

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தைகளைக் காட்டி தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்புடைய புகாரில் பேராசிரியர் நிர்மலா தேவி மீது 2018-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவருக்குத் துணையாக இருந்து செயல்பட்டதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்புடைய விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 26-ல் தீர்ப்பளிக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால், ஏப்ரல் 26-ல் முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உடல்நலக் குறைவு காரணமாக நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக, வழக்கின் தீர்ப்பானது ஏப்ரல் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 29-ல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதில் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.