வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை (டிச.14) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். இதனை தொடர்ந்து, இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வரும் 16, 17, 18 தேதிகளில் பரவலாகவும், அதனைத் தொடர்ந்து 19-ல் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக தென் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்குக் காரணமாக உள்ள மன்னார் வளைகுடாவை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுவிழந்து வருகிறது.
கடந்த அக்.1 தொடங்கி (நேற்று) டிச.13 வரை சுமார் 54 செ.மீ. மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த பருவமழை காலத்தில் பெய்யும் சராசரி மழையைவிட இது அதிகமாகும்.