https://x.com/KeralaSDMA
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக்கூடும்.

ராம் அப்பண்ணசாமி

தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதை அடுத்து, வரும் டிச.17 மற்றும் 18-ல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கடந்த ஓரிரு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இந்த வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியானது இன்று (டிச.16) வலுவடைந்து, புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக்கூடும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இதன் காரணமாக நாளை (டிச.17) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் கடலூரின் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இதை ஒட்டி இந்தப் பகுதிகளுக்கு ஏற்கனவே ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும், நாளை மறுநாள் (டிச.18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.