இன்று (ஆகஸ்ட் 1) மாலை நடந்த சென்னை லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த விழாவில் அவர் பேசியதாவது:
`சென்னையில் எத்தனை கல்லூரிகள் இருந்தாலும், லயோலா மட்டும் தனித்துத் தெரியும். கல்வி, விளையாட்டு, கலை என அனைத்திலும் லயோலா மாணவர்கள் தனித்துத் தெரிவார்கள். ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கியுள்ள இந்த லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசுகிறேன்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் ஏராளமான கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை. கல்வி என்கிற அழிக்க முடியாத செல்வம் அப்போது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் சேவை மனப்பான்மையுடன் லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது.
கலைஞர் பிறந்த அதே 1924-ம் வருடத்தில் இந்த லயோலா கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, 1925-ல் தொடங்கப்பட்டது. இன்னார் படிக்கலாம் இன்னார் படிக்கக்கூடாது என்றிருந்த காலத்தில் எல்லோருக்கும் படிக்கலாம் என்று வாசலைத் திறந்துவிட்ட கல்லூரிகளில் லயோலாவும் ஒன்று.
கல்விதான் ஒருத்தருக்கு இருக்கும் எல்லாத் தடைகளையும் தகர்த்து தலை நிமிர செய்யும் என்பதை உணர்ந்து கல்விப்புரட்சியைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சி வழி வந்த நாங்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், தொடர்ந்து கொடுப்போம்.
பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலமாக இருந்தது. தலைவர் கலைஞரின் ஆட்சிக்காலம் கல்லூரிக்கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடலின் ஆட்சிக்காலம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ்கிறது.
கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரத் தொடங்கியிருக்கின்றன. கல்விக்கான முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகள் மீண்டும் எழத்தொடங்கியிருக்கிறது. அதை அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் மாணவர்களாகிய நீங்கள் அறிவுக்களத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்’.