தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் மீண்டும் வழக்குப்பதிவு

ராம் அப்பண்ணசாமி

மதுரை மத்திய சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 4-ல் பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். அதன் பிறகு தேனியில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள், சவுக்கு சங்கர், அவரது ஓட்டுனர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோரைக் காரில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா விற்பனை செய்தற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து காவல்துறையினர் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகப் பதியப்பட்ட வழக்கு மதுரை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 29-ல் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.

இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் கீழ், தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தேனியில் கஞ்சா வைத்திருந்த சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நேற்று (ஆகஸ்ட் 12) உத்தரவிட்டார். இதை அடுத்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தியைப் பரப்பி பொதுமக்களை போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.