திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கவின் பக்கம் நிற்க வேண்டும் என அப்பெண்ணுக்கு உடுமலை கௌசல்யா ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகே சம்பந்தப்பட்ட பெண் தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார். இப்பெண்ணை கவின் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பெண் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை ஆணவக் கொலை செய்துள்ளார். சுர்ஜித்தின் பெற்றோர் காவல் உதவி ஆய்வாளர்களாக இருந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யக்கோரி கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராடி வருகிறார்கள்.
கவின் குறித்து அப்பெண் காவல் துறையிடம் கூறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா அப்பெண்ணுக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
தோழிக்கு,
"வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள் : என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த , கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை (10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!
எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!" என்று கௌசல்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Nellai Honour Killing | Honour Killing | Gowsalya | Udumalai Gowsalya Shankar | Kavin |