கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீட் வேண்டாம்: விஜய் அதிரடிப் பேச்சு

"நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்."

கிழக்கு நியூஸ்

நீட் தேர்வுக்கு விலக்களிப்பது உடனடித் தீர்வு என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது நிரந்தரத் தீர்வு என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்து கௌரவிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட கல்வி விருது விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 800 மாணவர்களுக்கு கடந்த 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று விருதுகளை வழங்கி வருகிறார். விருது வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் மத்தியில் விஜய் இன்றும் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"இன்று எதுவும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் பேசவில்லை என்றால், அது சரியாக இருக்காது என்று தோன்றியது.

நீட் தேர்வு பற்றிதான் பேசப்போகிறேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் நிறைய பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.

இந்த நீட் தேர்வை நான் மூன்று பிரச்னையாகப் பார்க்கிறேன். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது. 1975-க்கு முன்பு கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இதன்பிறகு, ஒன்றிய அரசு இதைப் பொதுப்பட்டியலில் சேர்த்தது. எனக்குத் தெரிந்து இதுதான் முதல் பிரச்னை.

இரண்டாவது ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரான விஷயம். ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இது மாநில உரிமைகளுக்காக மட்டும் கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு பார்வைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலம்தான், பலவீனம் அல்ல.

மற்றொரு முக்கியமான விஷயம், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு என்சிஈஆர்டி பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தினால் எப்படி?. கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள், அதுவும் மருத்துவப் படிப்புக்கு இப்படியென்றால், இது எந்தளவுக்குக் கடினமான விஷயம்.

மூன்றாவது பிரச்னை, கடந்த மே 5-ல் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சில குளறுபடிகள் நடந்ததாக நாம் செய்திகளில் பார்த்தோம். இதன்பிறகு, நீட் தேர்வு மீது இருந்த நம்பகத்தன்மை மக்கள் மத்தியிலிருந்து விலகிவிட்டது. நாடு முழுக்க இனி நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் இந்தச் செய்திகளிலிருந்து நாம் புரிந்துகொண்ட விஷயம்.

இதற்கு என்னதான் தீர்வு என்றால், நீட் விலக்குதான் உடனடித் தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் எதுவும் செய்யாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இதை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன?. கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை இதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு இடைக்காலத் தீர்வாக ஒரு சிறப்புப் பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும்.

தற்போது பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய பிரச்னை என்னவென்றால், சம்பந்தப்பட்ட துறைகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும், அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே, மாநில அரசுகளுக்கு இந்தத் துறைகளில் முழு சுதந்தரம் அளிக்கப்பட வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால், அவர்கள் நீட் தேர்வை நடத்திக்கொள்ளலாம்.

இதுதான் நீட் பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து.

மற்றபடி, அழுத்தம் இல்லாமல் உற்சாகமாகப் படியுங்கள். இந்த உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதேனும் வாய்ப்பைத் தவறவிட்டால், கடவுள் உங்களுக்கு வேறு பெரிய வாய்ப்புடன் காத்திருக்கிறார் என்று அர்த்தம். அதைத் தேடி கண்டுபிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்றார் விஜய்.