தமிழ்நாடு

ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

யோகேஷ் குமார்

ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தியுள்ளது.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மார்ச் 6 அன்று புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதன் பிறகு, நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் துறை சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கு தாம்பரம் காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் தொடர்பான வழக்கு ஆவணங்களை தாம்பரம் காவல் துறையினர், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இரண்டு பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அந்த இருவரும் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர் கோவர்தனின் உணவகம் மற்றும் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் சுமார் 6 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோவர்தனின் மகனிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.