நயினார் நாகேந்திரன் 
தமிழ்நாடு

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: புதிய சிக்கலில் நயினார் நாகேந்திரன்

யோகேஷ் குமார்

ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் கைதானவர்கள், நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மார்ச் 6 அன்று புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் துறை சம்மன் அனுப்பியது.

இதனிடையே நயினார் நாகேந்திரன், “இதை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். எனக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே 2 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தாம்பரம் காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் தொடர்பான வழக்கு ஆவணங்களை தாம்பரம் காவல் துறையினர், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் உட்பட இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ரயிலில் பணத்துடன் கைதானவர்கள் நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், எம்எல்ஏவுக்கான எமர்ஜென்சி கோட்டா பயணச்சீட்டில் ரயிலில் பயணித்தது தெரியவந்துள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரிடமும் விசாரணையை முடித்த பிறகு நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.