தமிழ்நாடு

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி: அமித்ஷா உறுதி | Amit Shah | NDA | ADMK | BJP

இங்கு நடைபெறும் திமுக ஆட்சிதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

திருநெல்வேலியில் இன்று (ஆக. 22) பாஜக மண்டல `பூத் பொறுப்பாளர்கள் மாநாடு’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அமித்ஷா பேசியதாவது,

`அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 130-வது சட்டமுன்வடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. பிரதமர், முதல்வர் என யாராக இருந்தாலும் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால் அவர்கள் பதவியில் தொடர முடியாது.

இந்த சட்டமுன்வடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன. அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பல மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா? சிறையில் இருந்தபடி ஆட்சியை நடத்த முடியுமா?

நான் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 130-வது சட்டமுன்வடிவை நீங்கள் கடுமையாக எதிர்க்கிறீர்கள் அதை கருப்பு சட்டம் என்று கூறுகிறீர்கள். அதை கருப்பு சட்டம் என்று கூற உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

பாஜக, அதிமுக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் வருங்காலத்தில் அமையும். இங்கு நடைபெறும் திமுக ஆட்சிதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி. ஏராளமான ஊழல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

திமுகவின் ஊழல் பட்டியல் மிக நீண்டது. டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து ஊழல், கனிமவள ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல், வேலை பெற பணம் வாங்கி ஊழல், அனைத்திற்கும் மேலாக ஏழை மக்கள் சம்பாதிக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலும் ஊழல் செய்துள்ளார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. அதிமுகவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது தமிழகத்தை மேன்மையடையச் செய்வதற்கான, தமிழர்களை முன்னேற்றுவதற்கான கூட்டணி.

இண்டியா கூட்டணிக் கட்சிகள் கனவில் உள்ளன. உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது ஸ்டாலினின் ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவது சோனியா காந்தியின் ஒரே லட்சியம். என்னாளும் உதயநிதியால் முதல்வராக முடியாது, ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது.’ என்றார்.