படம்: https://www.hcmadras.tn.nic.in/
தமிழ்நாடு

முரசொலி நில விவகாரத்தை விசாரிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

முரசொலி அறக்கட்டளை நில விவகாரம் குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி அறக்கட்டளையின் நிலம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. 12 கிரவுண்ட் மற்றும் 1,825 சதுர அடியில் உள்ள இந்த நிலமானது பஞ்சமி நிலம் என சர்ச்சை உருவானது.

இதைத் தொடர்ந்து, பாஜகவின் மாநில நிர்வாகி சீனிவாசன் 2019-ல் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக ஆணையம் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியது. முரசொலி அறக்கட்டளைக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

முரசொலி அறக்கட்டளையின் நிலம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அதில் அரசு மற்றும் வருவாய்த் துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் முரண்பாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பஞ்சமி நிலம் மற்றவர்களுக்கு மாற்றப்படுவது குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை மேற்கொள்வது அவசியமானது எனத் தெரிவித்தார். இதன் காரணமாக பஞ்சமி நிலம் தொடர்பாக ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார்.

அதேசமயம், ஆணையத்தின் தலைவராக இருந்த எல். முருகன் தற்போது மத்திய அமைச்சராகிவிட்டார். இதன் காரணமாக இதுதொடர்பாக புதிதாக நோட்டீஸ் பிறப்பித்து நியாயமான முறையில் அனைத்துத் தரப்புகளையும் கேட்டு விசாரணை நடத்த வேண்டும் என ஆணையத்துக்கு உத்தரவிட்டார். ஆணையத்தின் விசாரணைக்குத் தடைகோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.