மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுவது உரிமைத் தொகையா? தேர்தலுக்கான அச்சாரத் தொகையா என முதல்வரிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், 2023 செப்டம்பர் 15 முதல் மாதம்தோறும் தகுதியுள்ள மகளிருக்கு வங்கிக் கணக்கில் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் தகுதியுள்ள பலருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்கிற புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அரசு வழங்குவது மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? 2021 தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு 2023 வரை கிடப்பில் போட்டது ஏன்?
30 மாதங்கள் வழங்காமல், 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டுச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கியது ஏன்?
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்?
தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையைப் பெற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கால்கடுக்க நின்று மனு அளித்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா?
ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் ‘தகுதியற்றவர்கள்’ என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா? இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? சரி, தங்கள் கணக்குப்படி ‘தகுதியுள்ளவர்கள்’ என்று வகைப்படுத்தப்பட்ட மகளிருக்கு 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்காமல் விட்ட உரிமைத் தொகையான ரூ. 30,000 கடனை எப்போது தான் அடைப்பீர்கள்?
போதும் போதும் முதல்வரே! ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய உங்களை இனி ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.