நடிகை த்ரிஷா குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் கடந்த பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய், அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, அடுத்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியில், அடுத்தவர்களின் முகவரியில் அரசியல்வாதிகளாக இருக்கும் அவர்களுக்கு ஒரு சவால். என்னைப்போல் சொந்தமாக அரசியல் கட்சி, ஒரு சதவீத வாக்காவது வாங்கிக் காட்ட தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரன் விமர்சனம்
இதையடுத்து விஜயின் கருத்து குறித்து பிப்ரவரி 14 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:-
“பாவம் விஜய் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். த்ரிஷாவை விட்டு அவர் வெளியில் வந்தால்தான் எல்லாம் நல்லதாக நடக்கும். குடும்பத்துடன் நல்ல உறவில் இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல வழியில் சொல்ல வேண்டும். வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டும் முதலில். களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் விஜய். கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா என்பதுதான் விஜய்க்குப் பதில்” என்றார்.
நயினார் நாகேந்திரனுக்குக் கண்டனம்
நேரடியாக நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. தனி நபர் விமர்சனம் செய்வது அரசியல் நாகரிகம் இல்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார் நயினார் நாகேந்திரன். இதனிடையே, த்ரிஷா குறித்த தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டுப் பெண்களிடம் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
நயினார் நாகேந்திரன் விளக்கம்
இந்நிலையில், ராமதாஸின் கருத்துக்கு இன்று நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான். பாஜகவைக் கொள்கை எதிரி என்று சொல்லும் விஜய்க்கு என்ன கொள்கை இருக்கிறது? முதலில் தங்கள் கொள்கை இதுதான் என்று பட்டியலிட்டு புத்தகம் ஒன்றை வெளியிடச் சொல்லுங்கள். அதில் எதிலெல்லாம் பாஜக எதிராக இருக்கிறது என்பதையும் காட்டச் சொல்லுங்கள். கொள்கை என்று காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தால் போதுமா?” என்றார்.
BJP State President Nainar Nagenthran has responded to the statement of PMK founder Ramadoss that he should apologize for his remarks about actress Trisha.