செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அதிமுக - பாஜக கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று (நவ. 26) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இன்று காலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார். அவருக்கு விஜய் உறுப்பினர் அட்டை வழங்கினார். இதற்கிடையில் அதிமுகவிலிருந்து பிரிந்து செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செங்கோட்டையன், 1977 -ல் இருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பல்வேறு பணிகளைச் செய்தவர் என்பதை அனைவருக்கும் தெரியும். அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தில் இருந்தே அவர் இப்பதவிகளைப் பெற்றார். அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிளவு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து, 2016 வரை ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் மீண்டும் சிறு சலசலப்பு ஏற்பட்டு, சரியானது. அதன்பின் நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இக்காலகட்டத்தில், எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், செங்கோட்டையன் வெளியேறிவிட்டார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டார்.
அதிமுகவைப் பொறுத்தவரை, எப்போதும் தனக்கென ஒரு வாக்கு வங்கி உண்டு. அதில் யார் இருந்தாலும், அந்த வாக்கு வங்கி அவர்களுக்கே சேரும். அவர் சென்ற பிறகு, அந்த வாக்கு வங்கி அவருடன் அப்படியே சென்றுவிடுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். தேர்தலுக்குப் பின்னரே அதன் பலமும், பலவீனமும் வெளிப்படும். செங்கோட்டையனுக்கு 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளது. அவர் விலகியது திமுகவிற்கு எதிராக ஒரு பெரிய போட்டியைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை, அதிமுக - பாஜக கூட்டணிக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை. மக்கள் ஆதரவும் நிறைய உள்ளது” என்றார்.
BJP state president Nainar Nagenthran said that Sengottaiyan's joining the TVK Party will not affect the AIADMK-BJP alliance in any way.