நடிகை த்ரிஷா பற்றி தான் கூறிய கருத்துக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த பிப்ரவரி 14 அன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தவெக தலைவர் விஜய் சேலத்தில் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “விஜய் முதலில் த்ரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் விளக்கம்
நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான்” என்று கூறியிருந்தார்.
நடிகை த்ரிஷா கண்டனம்
இதுகுறித்து தனது கண்டனத்தை வழக்கறிஞர் அறிக்கை மூலம் நடிகை த்ரிஷா பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்படும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவமரியாதை என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்தக்கூடாது என்ற பொதுவான கருத்தை உயர் பதவிகளில் இருப்பவர்கள் பராமரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் என் பெயர் இணைக்கப்பட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்
இந்நிலையில், த்ரிஷா குறித்து தான் பேசிய கருத்திற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“எனது அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தளவில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தை நான் பேசியதும் இல்லை, அனுமதித்ததும் இல்லை. அன்றைக்கு நான் சொன்னது, தவறி வந்த ஒரு வார்த்தை. அதற்கு பாஜக அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் என்னிடம் பேசினார். அதேபோல் நேற்று அண்ணாமலை என்னிடம் பேசினார். உண்மையிலேயே இதில் யாரேனும் வருத்தப்படுவார்கள் என்றால், எனது வருத்தத்தை நான் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
BJP state president Nainar Nagendran has said that he sincerely regrets his comments about actress Trisha.