ANI
தமிழ்நாடு

சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்

பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அளித்த அறிக்கையை முன்வைத்து தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது

ராம் அப்பண்ணசாமி

மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

கடந்த ஏப்ரல் 6-ல் மக்களவைத் தேர்தல் பரப்புரை நடந்துகொண்டிருந்த சமயத்தில், தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை விரைவு ரயிலில் பயணித்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் இருந்து ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் இந்த மூவரும் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள் என்ற தகவல் வெளியானது. மேலும் இவர்களது பயணச் சீட்டை எம்.எல்.ஏ.க்களின் அவசர ஒதுக்கீட்டின் கீழ் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொடுத்த தகவலும் வெளியானது. மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் நயினார் நாகேந்திரன்.

பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினரின் அளித்த அறிக்கையை முன்வைத்து தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதை அடுத்து தமிழக சிபிசிஐடி-யிடம் வழக்கு மாற்றப்பட்டது. தாம்பரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என்று ஆரம்பம் முதல் மறுத்து வந்தார் நயினார் நாகேந்திரன்.

சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக நயினார் நாகேந்திரனுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் முதல் முறையாக இன்று நேரில் விசாரணைக்கு ஆஜரானார் நயினார் நாகேந்திரன். இந்த விசாரணையில் நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜியும் ஆஜராகியுள்ளார்.