டிடிவி தினகரன் தன் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பல்ல என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப். 6) விளக்கம் அளித்தார். அப்போது “நயினார் நாகேந்திரன் கூட்டணியைச் சரியாகக் கையாளவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார், அதனை மறுத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது -
”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதற்கு நான் தான் காரணம் என்று தினகரன் எதை வைத்துச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நான் எவரிடத்திலும் ஆணவமாகப் பேசவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு டிடிவி தினகரன் கூறும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.
அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுக ஆட்சியை அகற்ற முடியும் என்றுதான் நான் அனைத்து இடங்களிலும் பேசி வருகிறேன். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் சொல்லி வைத்துக் கொண்டு என் மீது குற்றம் சாட்டுகிறார்களா என்று தெரியவில்லை. அமமுகவை துக்கடா கட்சி என்று நாங்கள் என்றும் நினைக்கவில்லை. டிடிவி தினகரனும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். டிடிவி தினகரனின் நிபந்தனை என்னவென்றே தெரியவில்லை” என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
TTV Dhinakaran | Nainar Nagendran | AMMK | BJP | NDA