ANI
தமிழ்நாடு

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

ஜிபிஎஸ் கருவிகள், செல்ஃபோன்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். செருதூர் கிராமத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் தமிழக எல்லையில் நடுக்கடலில் மீன்டிபிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக நாகை மீனவர்கள் 17 பேர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது மூன்று வெவ்வேறு இடங்களிலும் இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தி ஜிபிஎஸ் கருவிகள், செல்ஃபோன்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரைக்குத் திரும்பினார்கள். காயமடைந்த மீனவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடற்கொள்ளையர்களின் தாக்குதலைக் கண்டித்து செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

கடற்கொள்ளையர்களின் தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்து கடலோரக் காவல் படை காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.