யுபிஎஸ்சி குடிமைப்பணி முதல்நிலை தேர்வில், தமிழக அரசின் `நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப்பணி காலி இடங்களுக்கான முதல்நிலை தேர்வை, கடந்த மே 25-ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்தியது. 979 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 11) வெளியாகின.
இதில் நாடு முழுவதும் தேர்ச்சி பெற்ற 14,161 தேர்வர்களின் பெயர் பட்டியல் யுபிஎஸ்சியால் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் ஜூன் 16 தொடங்கி 25-க்குள் முதன்மை தேர்வுக்கான விண்ணப்பத்தை இணைய வாயிலாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு ஆகஸ்ட் 22-ல் தொடங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குடிமைப்பணி தேர்வு முடிவுகள் தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும், நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்’ என்றார்.