தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது

ராம் அப்பண்ணசாமி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்கியிருந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று (ஜூலை 11) காலை 7 மணி அளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் சாட்டை துரைமுருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு காவல்துறையால் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் சாட்டை துரைமுருகன்.

நேற்று (ஜூலை 10) விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளராகப் போட்டியிட்டார். அபிநயாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன் ஈடுபட்டார்.

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு அரசு குறித்தும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் தரக்குறைவாக விமர்சித்ததாக சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் அரசு மீது அவதூறு பரப்பியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசியதற்காகவும், பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதற்காகவும், ஏற்கனவே இரண்டு முறை காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார் சாட்டை துரைமுருகன்.