தமிழ்நாடு

காவல் துறையினரிடம் அராஜகம்: கைதுக்குப் பின் வெளியான மன்னிப்பு வீடியோ

மயிலாப்பூர் காவல் துறையினர் கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

காவல் துறையினரிடம் இழிவான சொற்களைப் பயன்படுத்தி மோசமாக நடந்துகொண்டதற்காக சந்திரமோகன் மற்றும் அவருடையத் தோழி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சென்னை பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலையில் மயிலாப்பூர் காவல் துறையினர் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சாலையிலிருந்த கார் ஒன்றை எடுக்கச்சொல்லி காவல் துறையினர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதற்கு காரில் இருந்த ஆண் மற்றும் பெண் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், காவலர்களிடம் மோசமான முறையில் இழிவான சொற்களைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார்கள். காவல் துறையினர் இவற்றைப் படம்பிடித்துள்ளார்கள். இருந்தபோதிலும், இருவரும் எந்த அச்சமுமின்றி காவலர்களை நோக்கி இழிவாகவே நடந்துகொண்டுள்ளார்கள்.

காவலர்களிடம் ஆபாசமாகப் பேசியதற்காக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் துறையினர் கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் சந்திரமோகன் மற்றும் இவருடையத் தோழி தனலட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சந்திரமோகன் என்பவர் காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்பதைப்போல வீடியோ வெளியாகியுள்ளது. அதிகளவில் மதுபோதையில் இருந்ததால், அப்படி நடந்துகொண்டதாக சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.