தமிழ்நாடு

திருப்பூரில் கொலை, கொள்ளை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

"குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது."

கிழக்கு நியூஸ்

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுடைய பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் தெய்வசிகாமணி, அலமாத்தாள். இவர்களுடைய மகன் கோவையில் ஐடி ஊழியராகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. இவரும் தாய், தந்தையைச் சந்திக்க சேமலைகவுண்டம்பாளையம் வந்ததாகத் தெரிகிறது.

இவர்கள் மூவரும் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது இன்று காலை தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் கொலை குறித்து விசாரணையைத் தொடங்கினார்கள். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 8 சவரன் நகை திருடுபோயுள்ளதாகத் தகவல்" என்றார்.

இந்தக் கொலைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்குத் துளியும் பயமில்லை என்றும் தொடர் குற்றங்களைத் தடுக்க இங்கு ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அச்சமிகு கேள்வி மக்களிடத்தில் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.