சென்னை பறக்கும் ரயில் சேவையை நீண்ட இழுபறிக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயில் வசம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் கோரிக்கை வைத்தன. இதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு கடந்த 2018 பிப்ரவரியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.
பறக்கும் ரயில் சேவை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டால், பறக்கும் ரயில் சேவையின் தரம் உயர்த்தப்படும், ரயில் நிலையங்கள் நன்கு பராமரிக்கப்படும், ஏசி பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டன. இதனால், சென்னை மக்கள் இந்த இணைப்புக்காகக் காத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பது தாமதமாவது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் பதிலளிக்கையில், தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். மேலும், எப்போது முழுமையாக இணைக்கப்படும் என்பதற்கான கால விவரங்களைத் தற்போதைக்குக் கூற முடியாது என்று அவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில், "சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவைக்கானக் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே, பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவை வசம் ஒப்படைக்கப்படுவதற்கானப் பணிகள் தொடங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தான் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், முறையான ஒப்புதல் இதுவரை வெளிவரவில்லை. இதன்மூலம், பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான பணிகளில் விரைவில் முன்னேற்றம் காணப்படலாம் எனக் கூறப்படுகிறது.
MRTS | Chennai MRTS | Chennai Metro | Railway Board |