தமிழ்நாடு

நடிகர் எம்.ஆர் ராதாவின் மனைவி காலமானார்: திரையுலகம் அஞ்சலி | MR Radha | Radikaa |

நடிகை ராதிகா, நிரோஷா குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...

கிழக்கு நியூஸ்

நடிகை ராதிகாவின் தாயாரும் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியுமான கீதா, வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 86.

மறைந்த நடிகர் எம்.ஆர் ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் 3-வது மனைவிதான் கீதா ராதா. அவரது மகள்கள்தான் நடிகைகள் ராதிகாவும் நிரோஷாவும். இந்நிலையில், கீதா ராதா நேற்று (செப்.21) இரவு 9:30 மணிக்கு உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86 ஆகும்.

இதையடுத்து, நடிகை ராதிகாவுக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கீதா ராதாவின் உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (செப்.22) மாலை 4:30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீதா ராதாவின் மறைவை அடுத்து நடிகை ராதிகா குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

"நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுடைய மனைவி திருமிகு. கீதா ராதா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி திருமிகு.ராதிகா சரத்குமார் குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். மேலும் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.