மாதிரி படம் 
தமிழ்நாடு

பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை: விமர்சனங்களால் தாய் தற்கொலை!

கிழக்கு நியூஸ்

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 8 மாதக் குழந்தை ஒன்று அண்மையில் 4-வது தளத்திலிருந்து முதல் தளத்தில் தவறுதலாகக் கீழே விழுந்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அந்தக் குழந்தையைப் பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்கள்.

இதுதொடர்புடைய காணொளி இணையத்தில் அதிகளவில் பரவியது. குழந்தையைக் காப்பாற்றியவர்களை சிலர் பாராட்டினாலும், பலர் பெற்றோர்களின் கவனக்குறைவு குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தார்கள்.

இதனால், குழந்தையின் தாய் ரம்யா மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இவரும், கணவர் வெங்கடேஷும் ஐடி ஊழியர்களாக சென்னையில் பணியாற்றி வந்துள்ளார்கள். இரு வாரங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தையுடன் கோவை காரமடையிலுள்ள தனது தாய் வீட்டுக்கு ரம்யா வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ரம்யாவின் பெற்றோர்கள், அவரை வீட்டில் தனியாக விட்டு நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுள்ளார்கள். திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ரம்யா சுயநினைவை இழந்து கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். எனினும், இது பலனளிக்கவில்லை.

குழந்தை தவறி விழுந்த சம்பவத்திலிருந்து, விமர்சனங்களால் ரம்யா மிகுந்த குற்ற உணர்வில் இருந்துள்ளார். விபத்திலிருந்து குழந்தை தப்பியிருந்தாலும், விமர்சனங்களால் குழந்தையின் தாய் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். காரமடை காவல் துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சுகாதாரத் துறையின் உதவி எண்ணை அழைக்கலாம் - 104)