படம்: https://x.com/Udhaystalin
தமிழ்நாடு

மு.க. முத்துவின் உடல் தகனம் | MK Muthu

முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் பெசன்ட் மின் மயானத்தில் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

கிழக்கு நியூஸ்

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் உடல் சென்னையில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். கலைஞர் கருணாநிதி - பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர் மு.க. முத்து. இவர் பிறந்தபோதே, தாய் பத்மாவதியை இழந்தார். கலைஞர் கருணாநிதி தனது தந்தை முத்துவேல் நினைவாக இவருக்கு மு.க. முத்து எனப் பெயர் சூட்டினார்.

இவர் இளமைக் காலங்களில் நாடகங்கள் மூலம் திராவிட இயக்க கருத்துகளை முன்வைத்து வந்தார். பின்னாளில் 1970-ல் திறைத் துறையிலும் அறிமுகமானார் மு.க. முத்து. பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு படங்கள் மூலமாக தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் சொந்தக் குரலில் பாடக்கூடிய திறனும் கொண்டவர். இவர்கள் நடிக்கும் படங்களில் இவரே பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய தோற்றம் மற்றும் உடல்மொழி எம்ஜிஆர்-ஐ ஒட்டியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

77 வயதான மு.க. முத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் இன்று காலை காலமானார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈஞ்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த தனது மூத்த சகோதரர் மு.க. முத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, மு.க. முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் மு.க. அழகிரி, மு.க. தமிழரசன், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர்கள் சத்யராஜ், விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்டோரும் மு.க. முத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலை 5 மணிக்கு மேல் மு.க. முத்துவின் இறுதி ஊர்வலம் கோபாலபுரத்தில் தொடங்கியது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி உள்ளிட்டோர் பெசன்ட் மின் மயானத்தில் மு.க. முத்து உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

MK Muthu | M.K. Muthu | MK Stalin | Kalaignar Karunanidhi | Udhayanidhi Stalin