தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க அக்டோபர் 20 அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் அக்டோபர் 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ள சூழலில், இதற்கு முன்பாக அக்டோபர் 16 முதல் அக்டோபர் 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் அல்லாமல் 5,710 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இந்த வகையில் மொத்தம் 14,268 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது தவிர்த்து பிற ஊர்களிலிருந்து இயக்கப்படும் 6,110 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து ஒட்டுமொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி முடிந்து...
தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை வர அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளோடு சிறப்புப் பேருந்துகளாக 4,253 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுதவிர, பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 15,129 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாரக்கம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.
கிளாம்பாக்கம்
வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் முன்புறம் இருக்கும் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.
கோயம்பேடு
கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் பேருந்துகளும் காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தனி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளும் கோயம்பேடு டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.
மாதவரம்
பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன. மேலும், இங்கிருந்து வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை வழித்தட பேருந்துகள் இங்கிருந்தபடியே இயக்கப்படும்.
முன்பதிவு விவரங்கள்
இந்தப் பேருந்துகளை இயக்க முன்பதிவு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு முனையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரு முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
மேலும், www.tnstc.in இணையதளப் பக்கம் மற்றும் TNSTC Official App எனும் செயலியிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்" என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.
Diwali | Special Buses | Sivasankar | SS Sivasankar |